Monday, 17 November 2014 07:03

சபரிமலை அய்யப்பன் கோவிலில் புதிய கட்டுப்பாடுகள்

Written by 

திருவனந்தபுரம், நவ.16-


சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் கோவில் மற்றும் சுற்றுப்புறங்களில் கற்பூரம் ஏற்றிக்கொண்டு நடந்து வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில் உலக அளவில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு மண்டல- மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கோவில் நடை, அன்று 15/112016  (செவ்வாய்க்கிழமை) மாலை திறக்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய ஆசார நெறிமுறைகள், கட்டுப்பாடுகள் குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஆணையர் கே.வேணுகோபால் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-



* சபரிமலை சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக விரதம் கடைபிடிக்க வேண்டும். இருமுடி கட்டி வரும் அய்யப்ப பக்தர்கள் மட்டுமே 18-ம் படியேறி சன்னதிக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மற்ற பக்தர்களுக்கு கோவில் வலதுபுறம் வழியாக சென்று சாமியை தரிசிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

* சபரிமலை கோவில் ஆசார முறைப்படி 10 வயதுக்கு மேல் 50 வயது வரையுள்ள பெண்கள் மலையேறி வரவும், சாமி தரிசனம் நடத்தவும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாக புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையுடன் வர வேண்டும்.

* சபரிமலை மற்றும் சுற்றுப்புறங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும்.

* இருதய நோய் பாதிக்கப்பட்ட பக்தர்கள் கண்டிப்பாக மருத்துவர்களின் தகுந்த ஆலோசனையின்படி மருந்து-மாத்திரை எடுத்த பின்னரே மலையேற வேண்டும்.

* புனித நதியான பம்பை ஆற்றை சுத்தமாக வைத்து இருப்பது, அய்யப்ப பக்தர்கள் ஒவ்வொருவரின் கடமையாகும். பம்பை ஆற்றில் குளிக்கும் பக்தர்கள் தங்களது துணிகளை பம்பை ஆற்றில் வீசிவிட்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

* வனக்கோவிலான சபரிமலை அய்யப்பன் கோவிலை சுத்தமாக வைத்திருக்க அய்யப்ப பக்தர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

அதுபோல் பக்தர்களின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. வனப்பகுதி பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு கோவில் மற்றும் சுற்றுப்புறங்களில் எரியும் கற்பூரத்தை ஏந்திக் கொண்டு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. வனப்பகுதிகளில் தீவிபத்தை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* நாணயங்கள் மற்றும் நேர்ச்சை பொருட்களை பக்தர்கள் சபரிமலை சன்னதிக்குள் வீசி செல்ல வேண்டாம். இதற்காக கோவில் முன் பகுதியில் வைக்கப்பட்டுள்ள காணிக்கை பெட்டிகளில் தங்களது நேர்ச்சை பொருட்களை பக்தர்கள் செலுத்த வேண்டும்.

* சபரிமலையில் பூஜை-வழிபாடுகள், நேர்ச்சைகளை செய்ய விரும்பும் பக்தர்கள் தேவசம் போர்டின் கீழ் செயல்பட்டு வரும் சிறப்பு மையங்களில் பணம் செலுத்தி ரசீது வாங்கிக்கொள்ளவும்.

* சிறிய குழந்தைகளுக்கு பம்பையில் தேவசம் போர்டு சார்பில் வழங்கப்படும் அடையாள அட்டைகளை பெற்றுக்கொண்டு மலையேறிச் செல்ல வேண்டும்.

* சபரிமலை மற்றும் பம்பை சுற்றுப்புறங்களில் புகைப்பிடித்தல், மது அருந்துதல் மற்றும் வெற்றிலை - புகையிலை பொருட்கள் உபயோகிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* மலையேறி சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் மரக் கூட்டம், சரம்குத்தி வழியாக சன்னதிக்கு செல்ல வேண்டும். அதுபோல் தரிசனம் முடிந்து மலையிறங்கும் பக்தர்கள் ஊருக்கு திரும்பும் போது பெயிலி பாலம் வழியாக வந்து சந்திரானந்தன் பாதையில் செல்ல வேண்டும்.

* மது அருந்திவிட்டு, அய்யப்ப பக்தர்களின் வாகனங்களை ஓட்டிவருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 

Read 4239 times Last modified on Friday, 25 November 2016 07:23